அசோலா வளர்ப்பு
பெரணி என்ற தாவர வகையைச் சேர்ந்த அசோலா, தண்ணீரில் மிதந்து வாழும் தன்மையுடையது (free floating water fern) அனபீனா அசோலா (Anabeana azollae) என்ற நீலப்பச்சைப்பாசியுடன் கூட்டுவாழ்க்கை வாழ்ந்து தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. அசோலா-ரைசோம் என்ற உடல் பகுதியுடன் இணைக்கப்பட்டு, இரு கூறாகப் பிரிக்கப்பட்ட (bilobed) இலைகளுடனும், ரைசாய்டு என்ற வேர்களுடனும் காணப்படும்.
அசோலா தென் கிழக்காசிய நாடுகளிலும்> சைனாவிலும்> நெல் விளையும் பகுதியில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேலும்> அனைத்து நெல் பயிரிடும் நாடுகளிலும் இதனை தற்போது பெருமளவு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பிலிப்பைன்ஸ், இந்தியா> இலங்கை> வியட்நாம்> இந்தோனேசியா போன்ற நாடுகளில் பல வித ஆராய்ச்சிகளின் மூலம், அசோலா நெற்பயிறுக்கு நல்ல பயன் தரக்கூடிய உயிர் உரம் என்று கண்டறிந்துள்ளனர்.
அசோலா – அனபீனா கூட்டு வாழ்க்கை
அசோலா இலைப்பகுதிகளில் அனபீனா அசோலா என்ற நீலப்பச்சைப்பாசி தங்கி வளர்கிறது. அசோலா, நீலப்பச்சைப்பாசி வளர்வதற்கான சுக்ரோஸ் என்ற கரிமப்பொருளை கொடுக்கிறது. பிரதி உபகாரமாக நீலப்பச்சைப் பாசி காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து அசோலா இலைகளில் சேர்க்கிறது. அசோலா இலைப்பகுதிகளில் வாழும் அனபீனா அசோலா வெளிச் சூழ்நிலையின் (External environment) தொடர்பு இல்லாமலே வாழ்கிறது. அசோலாவில் உள்ள அனைத்து வகைகளிலும் அனபீனா அசோலா என்ற நீலப்பச்சைப்பாசி மட்டுமே கூட்டு வாழ்க்கை முறையில் வாழ்கிறது.
இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டே அசோலா வகைகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 வகைகள் உலகில் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
- அசோலா கரோலினியானா (Azolla caroliniana)
- அசோலா பிலிகுலாய்டஸ் (Azolla filiculoides)
- அசோலா மெக்ஸிகானா (Azolla mexicana)
- அசோலா மைக்ரோபில்லா (Azolla microphylla)
- அசோலா நைலோட்டிகா (Azolla inilotica)
- அசோலா பின்னேட்டா (Azolla pinnata)
அசோலா பின்னேட்டாவில் (Azolla pinnata) இரு வகைகள் உண்டு. அவை அசோலா பின்னேட்டா வார் பின்னேட்டா மற்றும் அசோலா பின்னேட்டா வார் இம்ரிகேட்டா.
அசோலா மைக்ரோபில்லா என்ற வகை நெல் வயலில் நன்கு வளர்ந்து பலன் தரும் என்றும், அதிகபட்ச வெப்பம் (38ºC) தாங்கும் என்றும் கண்டறிந்துள்ளனர். அனைத்து வகை அசோலாவும் வேகமாக வளர்ந்து 10-15 நாட்களில் இருமடங்காக ஆகிறது என்றும் கணக்கிட்டுள்ளனர். எனவே, நெல் வயலில் உள்ள சாதகமான சூழ்நிலையில் அசோலா நன்கு பெருகி நல்ல பலனைத் தரும்.
அசோலாவை வளர்க்கும் முறை
அசோலாவை எளிதில் வயல்வெளிகளில் வளர்க்க முடியும். வயல்களில் அசோலாவை வளர்க்க முதலில் நிழற்பாங்கான நிலங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திக்கு 8 கிலோ என்ற அளவில் அசோலாவை சீராக இடவேண்டும். 100 கி சூப்பர் பாஸ்பேட்டை 4 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை இடவேண்டும். 15 நாட்களில் அசோலா பாத்திகளில் நன்கு வளர்ந்து பரவிடும். ஒரு பாத்திக்கு 100 -150 கிலோ அசோலா கிடைக்கும். பின்னர் இதனை நெல் நடவு வயலில் இடலாம். ஒரு எக்டருக்கு தேவையான அசோலா தயாரிக்க இரண்டு சென்ட் அசோலா நாற்றாங்கால் தேவைப்படும்.
- குழி முறை:
- அசோலாவை வளர்க்க முதலில் பகுதி நிழற்பாங்கான நிலங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- சிமெண்ட் தொட்டி அல்லது சில்பாலின் பைகளை 6 x 4 x 1 அளவு பாத்திகளாக பிரித்து கொள்ள வேண்டும்.
- பாத்திகளில் 30 கிலோ செம்மண் அடிபகுதிகளில் சீராக பரப்ப வேண்டும்.
- தொட்டியில் ¾ பகுதி நன்கு சுத்தமான நீர் நிரப்ப வேண்டும். உப்பு நீர் பயன்படுத்தக் கூடாது.
- 1 கிலோ பழைய மாட்டுசாணம் (2-3 நாட்கள்) மற்றும் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்துவிட வேண்டும்.
- 2 முதல் 3 கிலோ தாய் அசோலா விதையை தொட்டியில் சீராக பரப்பிவிட வேண்டும்.
- வாரம் ஒரு முறை ½ கிலோ சாணம் மற்றும் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்துவிட வேண்டும்.
- தினமும் அசோலா வளர்க்கும் தொட்டியினை நன்கு கலக்கிவிட வேண்டும்.
- ¾ பகுதி மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.
- ¾ பகுதி நீர் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
நெல்லுக்கு அசோலா இடும் முறை
அசோலா குறைந்த வெப்ப நிலையிலே வளரும் என்பதால் இதனை சம்பா பருவ நெல்லுக்கு மட்டும் பயன்படுத்தலாம். அசோலாவை நெற்பயிருக்கு இடுவதற்கு இரண்டு முறைகள் உள்ளன.
- தழை உரமாக பயன்படுத்துதல் (Green manuring)
இம்முறையில் கடைசி சேற்றுழவுக்கு முன்னால் 5 டன் அசோலாவை அடியுரமாக இட்டு சேற்றுழவு செய்திட வேண்டும் இதற்கான அசோலாவை நடவு வயல் தயார் செய்யும் முன்னரே பாத்திகளில் தயார் செய்துகொள்ள வேண்டும். இம் முறையில் அசோலாவின் தேவை அதிகமாக இருப்பதால் இன்னோரு முறையை கையாளலாம்.
- இரு பயிர் செய்தல் (Dual cropping)
இம் முறையில் எக்டருக்கு 500 கிலோ அசோலாவை நடவு நட்ட 7 ம் நாள், நெல் வயலில் சீராக தூவ வேண்டும். நெல்லுக்கு இடப்படும் உரங்களையும் நெல் வயலில் உள்ள சூழ்நிலையையும் சாதமாக்கிக்கொண்டு நெற்பயிருடன் அசோலாவும் வளரும். இதனையே இரு பயிர் செய்யும் முறை (Dual cropping) என்பர். அசோலா இட்ட 25-30 நாட்களில் அசோலா பன்மடங்கு பெருகி நெல்வயல் முழுவதும் பரவிவிடும். பின்னர் களையெடுக்கும் ஆட்களைக் கொண்டு அசோலாவை மண்ணில் சேரும்படியாக மிதித்துவிட வேண்டும். இதனால் அசோலா மண்ணில் மக்கி சேமித்து வைத்தள்ள தழைச்சத்தையும் மற்ற சத்துக்களையும் முக்கியமாக அங்ககச் சத்தை மண்ணில் சேர்க்கிறது. நெற்பயிர் இச்சத்துக்களை எடுத்துகொண்டு நன்கு வளர்ச்சியடையும்.
பயன்கள்
- தழைச்சத்து நிலை நிறுத்தப்பட்டு நெற் பயிரின் உரத்தேவை குறைக்கப்படுகிறது.
- மண்ணில் அங்ககப்பொருள் (organic matter) சேர்வதால் மண்வளம் கூடுகிறது.
- நெற் பயிருடன் வளர்ந்து வயல் முழுவதும் பரவிவிடுவதால் களை கட்டுப்படுத்தப்படுகிறது.
- தினமும் கால்நடைகளுக்கு வழக்கமான தீவனத்துடன் கலந்து தீவனமாக வழங்கலாம்.
- கறவை மாடுகளுக்கு தினம்தோறும் 1 ஒரு கிலோ வீதம் கொடுக்கலாம்.
- வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு–½கிலோ கொடுக்கலாம்.
- கோழிகளுக்கு– 200 கிராம் வீதம் கொடுக்கலாம்.
- அசோலா தொடர்ந்து கால்நடைகளுக்கு கொடுக்கும் போது புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர் சத்து கிடைக்கும்.
- அசோலா தொடர்ந்து கால்நடைகளுக்கு கொடுக்கும் போது கலப்பு தீவனத்தின் அளவினை குறைத்து கொடுக்க வேண்டும்.
- ஒரு தொட்டியில் இருந்து சுமாராக வாரத்திற்க்கு 5 கிலோவீதமும், வருடத்திற்க்கு 300 கிலோவீதமும் கிடைக்கும்.
11. மனிதனும் உணவாக உட்கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு
இவேஆக வேளாண் அறிவியல் மையம்
புழுதேரி, ஆர்.டி.மலை, குளித்தலை, கரூர் -621313.
அலைபேசி எண். 9790020666