நாட்டு கோழி வளர்ப்பு
நம் நாட்டில் கோழிகள் கிராம மக்களின் வாழ்க்கையோடு
இணைந்த ஒன்று. நாட்டு கோழி வளர்ப்பு என்பது மிகவும் எளிதான கூடுதல் வருமானம் பெறக்
கூடிய தொழிலாகும். உயர் இன கோழிகளின் இறைச்சியைவிட
நாட்டு கோழிகளை இறைச்சிக்காக அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். இதனால் தற்போது நாட்டுக் கோழிகளுக்கு சந்தையில்
கூடுதலான விற்பனை விலையாக உயிருடன் ரூபாய் 100 முதல் 150 வரை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டுகோழிகளை சிறிது கவனத்துடன் வளர்த்தல் மிகவும்
இலாபகரமான தொழிலாக அமையும், இதன் மூலம் கிராமபுற மக்களின் சுயவேலைவாய்ப்பை பெருக்கவும்,
வீட்டுப் பெண்களின் தினசரி வருமானத்தை அதிகப்படுத்தவும் முடியும்.
நாட்டு கோழிகளின் இயல்புகள்
நாட்டு கோழிகள் உருவில் சிறியனவாகவும், மெதுவாக
வளரும் தன்மையுடையதாகவும் இருக்கும். உயர்
இன கோழிகள் 6 வார வயதில் முதிர்ச்சி அடையும்.
1.5 கிலோ எடையினை நாட்டு கோழிகளால் 6 மாத வயதில் தான் அடைய முடியும். சாதாரணமாக நாட்டு கோழிகள் ஒரு வருடத்தில் சுமார்
80-100 முட்டைகளுக்கு குறைவாக தான் இடும்.
நாட்டு கோழி முட்டையின் அளவும் சிறியதாக சுமார் 35 முதல் 50 கிராம் எடை உடையதாக
இருக்கும். மேலும், நாட்டு கோழிகளை பயன்படுத்தி
வான்கோழி, வாத்து போன்றவற்றின் முட்டைகளை அடை வைக்க முடியும். நாட்டு கோழிகள் மிகவும் சுறுசுறுப்பானவையாகவும்,
சாதாரண நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டவையாகவும் இருக்கும்.
நாட்டு கோழி வளர்ப்பு முறைகள்
நாட்டு கோழிகளை வீட்டின் பின்புறம் உள்ள புறக்கடையிலோ
அல்லது திறந்த வெளி மேய்ச்சல் முறையிலோ அல்லது தனிப்பட்ட இடத்தில் கொட்டகை அமைத்தோ வளர்க்கலாம்.
சுமார் 5 முதல் 20 நாட்டு கோழிகளை வீட்டின் பின்புறம் உள்ள புறகடை அளவுக்கு
தகுந்தாற்போல் வளர்க்கலாம். நாட்டு கோழிகளை
100க்கு மேல் வளர்க்கும் போது அவற்றை கூண்டில் அடைத்தோ அல்லது ஒரு வேலி அமைத்து சுதந்திரமாக
உலாவ விட்டோ வளர்க்கலாம். மழை, குளிர் மற்றும்
இரவு நேர பாதுகாப்பிற்கு வேலிக்குள் ஒரு கோழி வீடு அமைப்பதும் அவசியம். கோழி வீட்டில் ஒரு கோழிக்கு சுமார் 2 சதுர அடி இடப்பரப்பு
கொடுக்க வேண்டும். கோழி வீட்டின் தரையானது
ஈரமற்றதாக சிமெண்டினால் அமைக்கப்பட வேண்டும்.
கோழி வீட்டினை சுற்றி தரையிலிருந்து ஒன்றரை அடி சுவராலும் அதற்கு மேல் நான்கறை அடி கம்பி வலையாலும் சுற்று
சுவர் அமைக்க வேண்டும். கோழி வீட்டின் தரைமீது
3 முதல் 6 அங்குல அளவிற்கு ஆழ் கூளம் இட்டு கோழிகளை விட வேண்டும். கடலைத் தோல், கடலை பொட்டு, மரத்தூள், உமி மற்றும்
துண்டாக்கப்பட்ட வைக்கோல் முதலியவற்றை ஆழ் கூளமாக பயன்படுத்தலாம். கோழிகளுக்கு தேவையான தீவன மற்றும் தண்ணீர் தட்டுகளை
கோழி வீட்டிற்கு உள்ளேயும் திறந்து வெளியிலும் அமைக்க வேண்டியது மிகவும் முக்கியம். நாட்டு கோழிகளை 500 க்கு மேல் வளர்ப்பதற்கும் மேற்கண்ட
முறையில் கோழிவீட அமைத்து உயரின கோழிகளை வளர்ப்பது போன்று அடைத்து வைத்தும் வளாக்கலாம்.
தீவன மேலாண்மை
நாட்டு கோழிகள் தரையில் சிந்தி வீணாகும் தானியங்கள்,
உணவு பொருட்கள், புழு, பூச்சிகள், விதைகள் போன்றவற்றை உணவாக பயன்படுத்திக் கொண் வளர்கின்றன.
நாட்டு கோழிகள் ஆரோக்கியமாக வளர, முட்டையிட, மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து,
உயிர்ச்சத்து மற்றும் தாதுச்சத்து முதலியன அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.
கடைகளில்
விற்கப்படும் கோழி தீவனத்தினை வாங்கி நாட்டு கோழிகளுக்கும் உணவாக அளிக்கலாம். ஆனால் அது
அதிக செலவு பிடிக்கும். எனவே, நாமே நமது வீட்டில்
தீவனம் தயாரித்தும் கோழிகளுக்கு அளிக்கலாம்.
வீட்டில் அல்லது கடைகளில் மலிவாக கிடைக்கும் தானியங்கள், தவிடு வகைகள், புண்ணாக்குகள்
போன்றவற்றை கீழ்கண்டவாறு கலந்து தீவனமாக கொடுக்கலாம். மேற்கண்ட தீவன கலவையை தினமும் 50 முதல் 100 கிராம் வரை தண்ணீர் விட்டு விசைந்து நாட்டு கோழிகளுக்கு
கொடுக்க வேண்டும். மேலும், கோழிகளுக்கு நல்ல
சுத்தமான குடிநீர் எந்த நேரத்திலும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
கிளிஞ்சல்கள் போன்ற கால்சியம் நிறைந்த பொருட்களை கொடுக்க வேண்டும். இதன் மூலம் நாட்டு கோழிகள் தோல் முட்டை இடுவதை தவிர்க்க
முடியும்.
மூலப்பொருட்கள் |
குஞ்சு 0-10 வாரம் |
வளரும் கோழி 11-18 வாரம் |
முட்டைக்கோழி 18 வாரத்திலிருந்து |
மக்காச்சோளம் |
30 |
30 |
30 |
சோளம் |
5 |
5 |
5 |
அரிசிக்
குருணை |
15 |
15 |
15 |
சோயா
புண்ணாக்கு |
25 |
15 |
15 |
மீன்
தூள் |
8 |
6 |
8 |
சூரிய காந்தி புண்ணாக்கு |
5 |
5 |
18.5 |
அரிசித்
தவிடு |
9.5 |
20.5 |
18.5 |
தாது உப்புக் கலவை |
2.5 |
2.5 |
2.5 |
கிளிஞ்சல்கள் |
– |
– |
6 |
வைட்டமின்
கலவை |
250 |
250 |
250 |
காக்சிடியோஸ்டேட் |
50 |
50 |
50 |
நுண்
தாதுக்கள் |
100 |
100 |
100 |
நாட்டு கோழிகளை அடை வைத்தல்
ஒரு பெட்டை நாட்டு கோழி ஒரு ஆண்டில் சுமார்
80 முட்டைகள் இடும். நாட்டு கோழிகள் 10 அல்லது
20 முட்டைகள் இட்டபின் அடையில் படுகக்கும் குணமுடையவை. அந்த நேரத்தில் தான் அடையில் உட்கார்ந்து குஞ்சு
பொறிக்கும். நாள்பட்ட நாட்டு கோழி முட்டைகளின்
குஞ்சு பொறிக்கும் திறன் குறைவு. எனவே, நாட்டு
கோழிகள் இடும் கடைசி 10 அல்லது 15 முட்டைகளை
மட்டுமே அடைக்கு வைக்க வேண்டும். மேலும், கோழி
இறக்கை கொள்ளும் அளவுக்கு மேல் அதிகமாக முட்டைகளை அடை வைக்க கூடாது. சேவல் இல்லாமல் ;இடும் முட்டைகளில் இருந்து குஞ்சு
பொறிக்காது. எனவே, 10 பெட்டை நாட்டு கோழிக்கு
ஒரு சேவல் என்ற வீதத்தில் வளர்க்க வேண்டியது மிகவும் அவவசியம். நாட்டு கோழிகள் 21 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொறிக்கும்
செயற்கை முறையிலும் நாட்டு கோழி முட்டைகளை குஞ்சு பொறிக்க முடியும். 100 நாட்டு கோழிகளுக்கு மேல் வளர்க்கும் கோழிப்
பண்ணைகளில் அடைக்காக்கும் இயந்திரத்தினை பயன்படுத்தி குஞ்சு பொறிப்பதே நல்லது.
இளம் குஞ்சுகள் பராமரிப்பு
இயற்கை முறையில் பொறித்த நாட்டு கோழி குஞ்சுகளை
3 வாரம் வரையில் தாய்கோழியுடன் சேர்த்து வளர்ப்பதே நல்லது. செயற்கை முறையில் பொறித்த குஞ்சுகளை தனி அறையில்
அல்லது தனி அறையில் வட்டவடிமான புரூடர் அமைப்பினை ஏற்படுத்தி அதனுள் விடவேண்டும். மேலும், வட்ட தட்டினுள் பொருத்தப்பட்ட மின்சார பல்பினை
பயன்படுத்தி செயற்கை வெப்பத்தினை குறைந்தது 2 வாரங்களுக்கு கொடுக்க வேண்டியது முக்கியம்.
கோழிகளின்
கொத்தும் பழக்கத்தை போக்கும் பொருட்டு எல்லா கோழிகளுக்கும் அலகு வெட்டப்பட வேண்டும். குஞ்சுகளுக்கு முதல் வார வயதிலும் அல்லது 14-16வது
வார வயதிலும் அலகு வெட்டலாம். இதன் மூலம் ஒன்றை
ஒன்று கொத்துதலையும் குடலைப்பிடுங்கும் குணாதிசயங்களையும், முட்டை உண்ணும் பழக்கத்தையும்
தவிர்க்க வேண்டும்.
நாட்டு கோழிகளில் நோய் தடுப்பு
மேலாண்மை
வெள்ளைகழிச்சல், அம்மைநோய் முதலியன நாட்டு கோழிகளுக்கு
ஏற்படும் முக்கிய நச்சுயிர் நோய்களாகும். வெள்ளை
கழிச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நாட்டு கோழிகள் தீவனம் எடுத்து கொள்ளாது மிகவும் சோர்வாக
காணப்படும். வெள்ளை அல்லது பச்சை நிறத்தில் கழியும், சில சமயங்களில் கழுத்து திருகி,
கால் இறக்கை முதலியன செயல் இழந்துவிடும். எனவே,
இந்த நோயினை தடுப்பதற்கு 8 வார வயதில் தடுப்பூசி போடவேண்டியது மிகவும் அவசியம். மேலும், தொடர்ந்து ஒவ்வொரு வருடத்திலும் கோடைக்காலம்
துவங்குவதற்கு முன்பாக எல்லா கோழிகளுக்கும் வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடப்பட வேண்டும். புதிதாக வாங்கி வளர்க்கும் நாட்டு கோழிகளுக்கும் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போட வெண்டியது அவசியம். நாட்டு கோழிகள் அம்மை நோயாலும் பாதிக்கப்படும்.
அம்மை நோய் கொப்பளங்களை போரிக்பவுடரை வேப்பெண்ணை அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து
தடவி குணப்படுத்தலாம். நாட்டு கோழிகளில் அம்மை
நோய் வராமல் தடுக்க 5 வார வயதில் தடுப்பூசி
போட வேண்டும்.
நாட்டு கோழிகளில் ஒட்டுண்ணி
நீக்கம்
நாட்டு கோழிகளுக்கு அதிக எரிச்சல், சோகை மற்றும்
அமைதியின்மையை ஏற்படுத்துவது கோழி பேன், செல், உண்ணி போன்றவைகளாகும். கோழி ஒட்டுண்ணிகள் நாட்டு கோழிகளின் எடையினை குறைக்கும்
திறன் கொண்டவை. இவற்றினை ஒழிக்க 1 மில்லி பீயூட்டாக்ஸ்
மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நாட்டு கோழிகளின் தலையை தவிர மற்ற பாகங்களை முக்கி
எடுத்து உலரவிட வேண்டும்.
நாட்டு கோழிகளில் குடற்புழு
நீக்கம்
கோழிகளின் குடலில் உருண்டைப்புழுக்கள் மற்றும்
நாடாப்புழுக்கள் வாழ்கின்றன. இவற்றால் கோழிகளின்
வளர்ச்சி குன்றும். சில சமயங்களில் குடற்புழு பாதிப்பால் கோழிகள் இறக்க நேரிடலாம். குடற்புழுக்களால் பாதிக்கப்பட்ட நாட்டு கோழி கருமையாக
கழியும். மெலிந்து காணப்படும். எனவே, குடற்புழுக்களை நீக்குவதற்கு ஒவ்வொரு மாதமும்
குடற்புழு நீக்க மருந்துகளை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.