ஜப்பானிய காடை வளர்ப்பு
காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்பு பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.
இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்
மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.