தென்னை நார் கழிவு உரம் தயாரித்தல்
தென்னையிலிருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது, தேங்காய் மற்றும் தென்னை நார் ஆகும். தென்னை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுத்தலின் போது, மிகப்பெரிய அளவிலான எஞ்சிய நார் கழிவுகள் கிடைக்கின்றன. நார் பிரித்து எடுக்கப்பட்டு விட்டு எஞ்சிய கழிவை மக்கவைத்து உரமாக கிடைப்பதே தென்னை நார் கழிவு உரமாகும்.
தென்னை நார்க் கழிவு கம்போஸ்ட் தொழில்நுட்பம்
மூலப்பொருட்களை சேகரித்தல்
எஞ்சிய தென்னை நார்க்கழிவுகள் தென்னை நார் கழிவு தொழிற் சாலைகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. நார்கள் முதலிலேயே சலித்து பிரித்தெடுக்கப்படுகின்றன. ஏனெனில், இந்த நார்கள் மக்காமல் மற்ற கழிவுகளையும் மட்குவதிலிருந்து தாமதப்படுத்துகிறது. எனவே, மட்க வைத்தலின் போது, நார்களை பிரித்தெடுத்தல் நன்று.
இடம் தேர்வு செய்தல்
சரியான இடத்தை தேர்வு செய்தல் நன்று, தென்னை மரங்களுக்கிடையிலோ அல்லது ஏதேனும் மர நிழலிலோ இடத்தைத் தேர்வு செய்தல் மிக்க பயனளிக்கும்;. ஏனெனில் மரங்களின் நிழலானது, ஈரப்பதத்தை மட்குகின்ற கழிவுகளில் தங்க வைக்கிறது. தரையானது நன்கு சமப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சிமெண்டு பூசப்பட்ட தரை அல்லது சில்பாலின் பை மிகவும் உகந்தது.
தயாரிக்கும் முறை
சில்பாலின் பை மற்றும் கொள்ளளவு – 12x4x2 அடி (நீளம், அகலம், உயரம்) 1 டன் தென்னை நார் கழிவு தயாரிக்க தேவையான அளவு ஆகும்.
மூலப்பொருட்கள்
- தென்னை நார் கழிவு
- வேஸ்ட் டீகம்போஸர் (அ) பயோமினரலைசர் (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை)
- உயிர் உரங்கள்
- மாட்டுச் சாணம்
- வெல்லம்
நன்கு மக்கிய தென்னை நார் கழிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட சில்பாலின் பையில் 1 அடி உயரத்திற்கு கழிவுகளை நிரப்பவும், பிறகு மேலே கொடுக்கப்பட்ட நுண்ணுயிர் கலவைகளான வேஸ்ட் டீகம்போஸர் (அ) பயோமினரலைசர், உயிர்உரங்கள், மாட்டுச் சாணம், வெல்லம் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கரைசலாக தெளிக்க வேண்டும். இதுபோல் மீண்டும் தென்னை நார் கழிவை ஒரு அடி உயரத்திற்கு நிரப்பி நுண்ணுயிர் கூட்டுக்கலவைகளை சேர்க்க வேண்டும். இது போல் 3 அடுக்காக நிரப்ப வேண்டும்.
குவியலை கிளறிவிடுதல்
இந்த கழிவுக்குவியலை 5 நாட்களுக்க ஒரு முறை கிளறிவிட வேண்டும். இதனால் புதிய காற்று உட்சென்று ஏற்கனவே அங்கு உபயோகப்படுத்தப்பட்ட காற்றை வெளியேற்றுகிறது. இந்த மட்கவைத்தல் காற்றின் உதவியால் நடைபெறுகிறது. ஏனெனில் மட்குவதற்கு உதவும் நுண்ணுயிரியின் செயல்பாட்டுக்கு பிராண வாயு அவசியம். எனவே, குவியலை கிளறிவிடுதல் மறைமுகமாக நல்ல காற்றோட்டத்திற்கு உதவுகிறது.
ஈரப்பதத்தை தக்க வைத்தல்
நல்ல தரமான உரங்களை பெற தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்தல் அவசியமாகும். அதாவது, மட்க வைத்துலுக்கான கழிவு எப்பொழுதும் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும். அதே சமயம் கழிவிலிருந்து தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றிவிட வேண்டும். கழிவுகளுக்கு போதுமான ஈரப்பதத்தை பரிசோதிக்க, ஒரு கையளவு கழிவை எடுத்து, இரு உள்ளங்கைகளுக்கிடையில் வைத்து அழுத்த வேண்டும். இதில் நீர் கசிவு இல்லையெனில் இதுவே சரியான நிலையாகும்.
மக்கிய உரம் முதிர்வடைதல்
கழிவுகள் மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு கழிவுகளைப் பொருத்து மாறுபடும். எல்லா காரணிகளும் சரியான அளவில் இருந்தால், கழிவுகள் 60 நாட்களில் மக்கி உரமாகிவிடும். கழிவுகளின் மட்குதலை அதன் இயற்பியல் கூறுகளை வைத்து முடிவு செய்ய முடியும். முதலில் கழிவுகளின் கொள்ளளவு குறைந்து, அதன் உயரம் 30 சதவிகிதம் குறைந்து இருக்கும். இரண்டாவது மக்கிய கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி, அதன் துகள்கள் அளவில் சிறியதாக மாறி இருக்கும். 3வதாக மக்கிய உரத்தில் இருந்து மண் வாசனை வரும்.
மட்காத மற்றும் மட்கிய தென்னை நார் கழிவில் உள்ள சத்துக்களின் அளவு
பண்புகள் | மட்காத தென்னை நார்க்கழிவு (%) | மட்கிய தென்னை நார்க்கழிவு (%)
|
லிக்னின் | 30 | 4.8 |
செல்லுலோஸ் | 26.52 | 10.1 |
தழைச்சத்து | 0.26 | 1.24 |
மணிச்சத்து | 0.01 | 0.06 |
சாம்பல்சத்து | 0.78 | 1.2 |
இரும்பு | 0.07 | 0.09 |
துத்தநாகம் | 7.5 | 15.8 |
கரிமச்சத்து: தழைச்சத்து | 112.1 | 24.1 |
மட்கிய தென்னை நார்க்கழிவின் பயன்கள்
- மட்கிய தென்னை நார்க்கழிவினை மண்ணில் சேர்ப்பதால், மண்ணின் பண்புகள், மண்ணின் அமைப்பு ஆகியவை மேம்படுகின்றன. இது மணற்பாங்கான மண்ணின் கடினத்தன்மையை அதிகப்படுத்துகிறது மற்றும் களிமண்ணை காற்றோட்டமுள்ளதாக்குகின்றது.
- மண் துகள்களை ஒன்று சேர்த்து மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
- நீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தி, மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்துகிறது.
- மட்கிய உரமாதலால், இது மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது.
- எல்லாவகைப் பயிர்களுக்கும் எக்டருக்கு 5 டன் மட்கிய தென்னை நார்க்கழிவு தேவைப்படுகிறது. இந்த கழிவை அடியுரமாக பயிர் நடவுக்கு முன் மண்ணில் இட வேண்டும்.
- தென்னை, மா, வாழை மற்றும் பழமரங்கள் போன்ற நன்கு வளர்ந்த மரங்களுக்கு குறைந்த அளவு, மரத்துக்கு 5 கிலோ போதுமானது. கிண்ணம் போல் பறித்து தென்னை நார் கழிவு உரத்தையும் பண்ணை குப்பையையும் கலந்து இடவேண்டும்.
உற்பத்திக்கான செலவு மற்றும் வருமானம்
- செலவு – ரூ.5000/-
- வருமானம் – ரூ. 12000/-
- நிகர இலாபம் – ரூ.7000/-
மேலும் தகவல்களுக்கு
இவேஆக வேளாண் அறிவியல் மையம்
புழுதேரி, ஆர்.டி.மலை, குளித்தலை, கரூர் -621313.
அலைபேசி எண். 9790020666